Thursday, July 30, 2020

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி






இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , மேலும் பல 'முதல்'களுக்குச் சொந்தக்காரர்!
    
பிறக்கும் போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணறலால் இரவு ஒழுங்காகத் தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது. 

அந்தப் பெண்ணின் முதல் தங்கைக்கு தொடர் வயிற்றுப் போக்கு இருந்தது. இரண்டாவது தங்கை, திருமணம் நடந்து சில நாட்களிலேயே புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போனார். இப்படி திரும்பிய இடமெல்லாம் நோயைப் பார்த்த அப்பெண் ஒரு உறுதி எடுத்தாள். மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களை விரட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தாள்.ஆம்.. அந்தப் பெண் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

1886-ஆம் ஆண்டு இதே சூலை 30-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர்க் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர,  4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில் சில பழைமைவாதிகள், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்குச் சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அந்தக் காலத்தில் எல்லாம் பெண்கள் பள்ளிகள் சென்று படிப்பதே பெரிய விஷயம். வயதிற்கு வந்துவிட்டால் பள்ளிகளை விட்டும் நிறுத்தி விடுவர். ஆனால் குடும்பத்தை ஆட்கொண்ட நோய்களை விரட்டப் படிக்க வேண்டும் என்று ஆர்வமெடுத்த முத்துலட்சுமி, படிப்பில் அதீத கவனம் செலுத்தினார். பள்ளிப்படிப்பை முடித்த முத்துலட்சுமிக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் இந்தியா முழுவதும் மருத்துவம் படிக்க எந்தப் பெண்ணிற்கும் அனுமதி அப்போது இல்லை..

முத்துலட்சுமி பற்றி அறிந்து கொண்ட, நீதிக் கட்சியின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பனகல் ராஜா, இவரை இங்கிலாந்திற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி செய்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வரும் வியாதிகள் பற்றி படித்தார் முத்துலட்சுமி.

குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்ட அவர் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். 

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆண்களோடு தனி ஒரு பெண்ணாக படித்த முத்துலட்சுமிக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை. பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு பெண்களை வகுப்பறையில் உட்காரவே விடமாட்டார். அறுவை சிகிச்சைப் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்ணை அம்மையார் பெற்றவுடன், தனது வகுப்பறைக்குள் வரலாம் உட்காரலாம் என்று மனம் மாறினார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் ஒரு பொன்னான நாள் என்று அன்றைய தினத்தை எழுதினார் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு. காரணம் எழும்பூர் மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் இவரே. பின்பு மருத்துவ உயர் படிப்பிற்கு பாரிஸ் சென்றார்.

சென்னை மாகாண சட்டசபையில் பங்குபெற்ற முதல் பெண். மருத்துவம் படித்த முதல் பெண். ராணி மேரி கல்லூரியின் முதல் இந்தியப் பெண் முதல்வர். சென்னை மாநகராட்சி துணைத்தலைவர் என எல்லாவற்றிலும் முதலிடமே அவருக்குக் கிடைத்தது.1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யவும்பட்டார்!

தனது மருத்துவம் மக்களுக்குச் சேவையாக இருக்க வேண்டும் என்று நினைத்த முத்துலட்சுமி அவர்கள், சென்னை அடையாரில் புற்றுநோய் நிறுவனத்தை ஆரம்பித்தார். பின் அதை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி இலவச சிகிச்சையும் கொடுத்தார்.

தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள், கணிகைகள்,நர்த்தகி, நடன மங்கை என பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு, பெண்கள் கோவில்களுக்கு அர்பணிக்கப்பட்டனர். இந்த பெண்களுக்கு உடலில் திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது முத்திரை பதிக்கப்படும்.

அந்தக்காலத்தில் தேவதாசி எனப்படுவோர் கடவுள் முன் அமர்ந்து தாலியைக் கட்டிக்கொள்வார்கள். கி.பி.4-ஆம்  நூற்றாண்டில் இருந்து இந்தப் பழக்கம் உள்ளது. 8 முதல் 9 வயதுடைய குழந்தைகள் இப்படிப் பழக்கப்பட்டார்கள். 

கோவிலைக் கவனித்து வந்த பிராமணர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இரையானார்கள் இப்பெண்கள். கோவில்களில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை 1886 ஆம் ஆண்டு முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஜோசான் பட்லர் என்பவர். இந்து மதத்தில் தலையிடக்கூடாது என்று பிராமணர்கள் இங்கிலாந்து ராணி விக்டோரியாவிடம் வாக்குறுதி வாங்கி இருந்ததால், அவர் இதில் தலையிடவில்லை. மதத்தைக் காட்டி பெண்களை தங்கள் இச்சைக்கு இரையாக்கி வந்தனர் பிராமணர்களும், ஜமீன்தார்களும். இதனை ஒழிக்க விரும்பினார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 1927-ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை தீர்மானமாகக் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. இதை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்றார். மத விவகாரங்களில் தலையிடக் கூடாது. மதம் போய் விடும். தாசிகளை ஒழிப்பது கலையை ஒழிப்பதற்கு சமம் என்றார் அவர். தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்த பிராமணர்கள், சட்டசபையில் எதிர்த்துப் பேசினார்கள்.

உடனே சீறி எழுந்த முத்துலட்சுமி அம்மையார், “உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இந்தத் தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று சட்டசபையில் கேட்டார். அவரின் பேச்சைக் கேட்ட அனைத்து ஆண் சட்டமன்ற உறுப்பினர்களும் தலை குனிந்தனர்.

இறுதியில் தீர்மானம் நிறைவேறியது. இதை பொதுமக்கள் கருத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றுக்கு விடப்பட்டது. அப்போது ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார்.

இது குறித்து தனது நூலில் எழுதியுள்ள முத்துலட்சுமி அம்மையார், “நம் நாட்டின் சுதந்திரத்திற்காக நிறைய திட்டங்களை ராஜாஜி செய்திருந்தாலும், சமூக சீர்த்திருத்தத்தைப் பொறுத்தவரை, முக்கியமாகப் பெண் விடுதலையைப் பொறுத்தவரை அவர் ஒரு பழமைவாதி. மாற்றத்தை விரும்பாதவர்” என்று எழுதியுள்ளார்.

1947-ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக இருந்த போது, இந்த சட்டம் அமலுக்கு வந்தது. தேவதாசி முறை ஒழிப்பு மட்டுமல்ல, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் என பல்வேறு புரட்சிகளை கொண்டு வர போராடியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.

அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது.

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.

தனது வாழ்நாளில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, கடமை முடிந்தது என்று இருந்துவிடாமல், சமூக அக்கறைக் கொண்டு அவ்வை தொண்டு நிறுவனம் நிறுவி சேவை செய்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். குறிப்பாக பெண் விடுதலைக்காக, அதுவும் ஆணாதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், அவரின் தன்னம்பிக்கையும் தைரியமும் இன்றைய கால பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஆகும்!

நன்றி : திரு பாண்டியன் சுந்தரம்

No comments:

Post a Comment

கவிரா பக்கங்கள்